ஒப்புதல் அளிக்காத ஆளுநர்.. காலாவதியான ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா..

 
முதன்முறையாக ஆளுநர் ஆர்.என் ரவி

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை  சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில்,  அவசர சட்டம் காலாவதி ஆகிவிட்டது.  

ஆன்லைன் ரம்மி

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து நேற்று வரை  32 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.  இந்த தொடர் தற்கொலைகள் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் குழு நியமிக்கப்பட்டது. அந்தக்குழு அளித்த அறிக்கையின் படி,  ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய அவசர சட்டம் இயற்றப்பட்டு கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.  அதற்கு ஆளுநர் ரவியும் ஒப்புதல் அளித்ததால் அவசர சட்டம் அக்டோபர் 3ம் தேதி அரசு இதழில் வெளியிடப்பட்டது.

தமிழக அரசு

அக்டோபர் 17ஆம் தேதி மீண்டும்  சட்டமன்றம் கூடியதை தொடர்ந்து அவசர சட்டத்தை நிரந்தரமாக்கும் சட்டம் மசோதா அக். 19ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு,   ஆளுநரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 28ஆம் தேதி அனுப்பப்பட்டது. மசோதா குறித்து ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு அடுத்த நாளே அரசு விளக்கம் அளித்தும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.  அரசியல் அமைப்பு சட்டம் 213 வது பிரிவின்படி அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின் பேரவை கூடிய நாளிலிருந்து 6  வாரங்களில் அது காலாவதி ஆகிவிடும்.  அதன்படி ஆறு வாரங்கள்  ஆனதால் அவசர சட்டம்  நேற்றுடன்  காலாவதி ஆகிவிட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரம் கேட்டபோதிலும்,  ஆளுநர் இதுவரை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை இல்லாத சூழலே நீடிக்கிறது.