"விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு.. பழைய நடைமுறை தான்" - அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி!

 
செந்தில்பாலாஜி

தமிழ்நாட்டில் முதன்முறையாக 1984ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது சிறு, குறு விவசாயிகளுக்கு இலவச மின்சார  திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் 1990ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சார திட்டத்தை நீட்டித்தார். இதையடுத்து 2002ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்புகளில் மீட்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக மிகக் கடுமையாக எதிர்த்தது. அதற்கு ஆளும் தரப்பு  விவசாயிகளுக்காக எவ்வவவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளவே பொருத்தப்படுவதாக விளக்கம் கொடுத்தது.

இச்சூழலில் 2020ஆம் ஆண்டு மத்திய அரசு மின்சாரச் சட்டமுன்வடிவு வெளியிட்டது. இந்தச் சட்டமுன்வடிவு விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தையும், வீட்டுப் பயனீட்டாளர்களுக்கான 100 யூனிட் இலவச மின்சாரத்தையும் நிறுத்தும் ஒரு முயற்சி என்று கூறி அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இச்சூழலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. கடந்த செப்டம்பர் மாதம் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். ஆனால் அந்த புதிய மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்தப்பட்டது. 

1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு 4 மாதத்தில் முடிக்கப்படும்!'-  முதல்வர் ஸ்டாலின் - Arasiyaltimes

இது விவசாயிகள் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் மூலம், எதிர்காலத்தில் கட்டணம் வசூலிப்பதற்காகத்தான் மீட்டர் பொருத்தப்படுகிறது என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது. தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார் மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு பழைய முறைப்படியே வழங்கப்படும்" எனக்கூறி முடித்துக்கொண்டார். மீட்டர் பொருத்தப்படாமல் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.