ஐஐடி-களில் அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்..- தமிழக அரசு அரசாணை..

 
தலைமைச் செயலகம்

அரசுப்பள்ளிகளில் படித்த  மாணவர்களின்  உயர்கல்வி  கட்டணத்தை   அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  

இதுகுறித்து தமிழக உயர்கல்வித் துறை செயலாளர்  தா.கார்த்திகேயன் வெளியிட்ட அரசாணையில், “ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில், இந்த நிறுவனங்களில் இளநிலை பட்டப்படிப்புக்கான முழு செலவையும் மாநில அரசே ஏற்கும். இதற்கான வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்படுகின்றன.

கல்லூரி மாணவர்கள்

அதன்படி, இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கு, உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கைப் பெற்ற மாணவர்கள் 6ம்  வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்திருக்க வேண்டும். மேற்கண்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற மாணவர்கள் அந்த நிறுவனங்களில் சேர்வதற்காக கலந்து கொண்ட நுழைவுத் தேர்வில் எடுத்த மதிப்பெண் பட்டியல், சேர்க்கை ஆணை, கல்வி நிறுவனத்தின் தலைவரால் வழங்கப்படும் ‘போனபைட்’ சான்று மற்றும் அக்கல்வி நிறுவனங்களில் வசூலிக்கப்படும் அனைத்து கட்டண விவரங்களுடன் அந்த மாணவர்களின் சொந்த மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சித் தலைவர், விண்ணப்பித்த மாணவர்களின் அனைத்து சான்றுகளையும் சரிபார்த்து, மேற்படி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற  மாணவர்களின் படிப்புக்காக ஆகும் மொத்த செலவின விவரங்களுடன், தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு பரிந்துரை செய்து கருத்துரு அனுப்ப வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் அனுப்பும் கருத்துருவை பரிசீலித்து,  மொத்த செலவினத்தை கணக்கீடு செய்து உரிய நிதி ஒதுக்கீடு ஆணை பெற அரசுக்கு, தொழில் நுட்ப கல்வி இயக்ககம் கருத்துரு அனுப்ப வேண்டும்.

சென்னை ஐஐடி

 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, அவர்களுக்கான செலவினத் தொகை அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனத்துக்கு மின்னணு சேவை மூலம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. அதேபோல, இந்த நேர்விலும் மாணவர்களுக்கான செலவை நேரடியாகவே மாணவர்களின் வங்கி கணக்கில் மின்னணு சேவை மூலம் செலுத்த தொகை   வழங்கப்படும். இந்த திட்டத்தை கண்காணிக்கவும், சரிபார்த்தலை விரைவாக முடிக்கவும்  தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் மூலம்   இணைய தளம் உருவாக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.