"அறத்தைப் போற்றி, தர்மத்தை நிலை நாட்டிட உறுதியேற்போம்" - சசிகலா வாழ்த்து!

 
sasikala

கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

sasikala
இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "பகவான் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமான ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த நன்னாளான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளை ஆர்வத்தோடும் மகிழ்வோடும் கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளன்று வீட்டில் அழகிய வண்ணக் கோலங்களிட்டு, வாசலில் மாவிலை தோரணங்களைக் கட்டி, ஸ்ரீகிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த வெண்ணெய், தயிர், பழவகைகள், பலகாரங்கள் போன்றவற்றை படைத்து, குழந்தைகளை கண்ணனைப் போல் அலங்கரித்து, குழந்தைகளின் பாதச் சுவடுகளை மாக்கோலத்தில் தங்கள் இல்லங்களுக்குள் பதித்து, அந்த குழந்தைக் கிருஷ்ணனே தங்கள் இல்லத்திற்கு வந்தது போல் மனதில் நினைத்து மகிழ்ச்சியுடன் இறைவனை வழிபடுவதை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள்.நல்லோரைகாத்து, தீயோரை அழித்து, அறத்தை நிலை நிறுத்துபவர் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். எப்போதெல்லாம் தர்மம் அழிந்து போய் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் தோன்றுபவர் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.

sasikala

இனம், மொழி, மதம் மற்றும் சாதியற்ற பாதையின் மூலம் பாமர மக்களுக்கு வாழ்க்கை முறையை வகுத்து கொடுத்து, துன்பத்தில் இன்பம் காண வைக்கும் ஞானரசமாம் பகவத் கீதையை இந்த உலகத்திற்கு உபதேசித்த பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருவருளால் தீயவை அகன்று நன்மை செழித்து அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை மனதார வேண்டுகிறேன். "குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் தவிர்த்து, தெளிந்த நீரைப்போல் மனதை நிலை நிறுத்தி, பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்தால், ஒருவர் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்று எல்லா சுகங்களும் மன நிம்மதியும் கிடைக்கப் பெற்றவராய் மகிழ்வுடன் வாழ்ந்திடலாம்" என்ற ஸ்ரீகிருஷ்ண பகவானின் கீத உபதேசத்தை நாளும் மனதில் கொண்டு ஸ்ரீகிருஷ்ண பகவான் அவதரித்த இத்திருநாளில், ஒவ்வொருவரும் துரோக சிந்தனைகளை விலக்கி, அறத்தைப் போற்றி, தர்மத்தை நிலை நாட்டிட உறுதியேற்போம் எனக் கூறி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.