தமிழகம் முழுவதும் குரூப் 2, 2ஏ தேர்வுகள் தொடங்கியது.. 12.45 மணிக்கே வெளியே வர அனுமதி..

 
TNPSC

தமிழகம் முழுவதும்  டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.  தேர்வு முடிந்தாலும் 12.45 மணிக்கு பிறகே தேர்வர்கள் வெளியே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் 5529 காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வுகளான குரூப் 2 மற்றும் 2 ஏ  முதல்நிலை தேர்வுகள் இன்று நடைபெறுகின்றன.  தமிழகம் முழுவதும் மொத்தம் 11,78,175 லட்சம் பேர் குருப் 2 தேர்வை எழுதுகின்றனர். இதில்,  ஆண் தேர்வர்கள் 4,96,247 பேரும், பெண் தேர்வர்கள் 6,81,089 பேரும்  அடங்குவர் .  தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  அண்மையில்  வெளியிட்டிருந்தது. அதன்படி 30 மாவட்டங்களில் 117 இடங்களில்  4,012 தேர்வு மையங்களில் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

tnpsc

  தமிழக முழுவதும் 323 பறக்கும்படை, 6,400 ஆய்வு குழு, 4,012 வீடியோ குழு அமைக்கப்பட்டு முழு கண்காணிப்புடன் தேர்வுகள் நடைபெறுகிறது.   12.30 மணிக்கு தேர்வு முடிந்தாலும், 12.45 மணிக்கு பிறகே தேர்வர்கள் வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.  இன்று நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே தேர்வு மையங்களுக்குள் அனுமதி வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே  அறிவித்திருந்தது. அதன்படி தேர்வர்கள் அனைவரும்  முககவசம் அணிந்தபடி பங்கேற்றுள்ளனர்.  

டிஎன்பிஎஸ்சி

முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கும், 9 மணிக்கு பிறகு தேர்வு மையங்களுக்கு வந்தவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.  சென்னையில் மட்டும்  7 இடங்களில் 380 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.  அதில் 1 லட்சத்து 15 ஆயிரம்  பேர் தேர்வு எழுதுகின்றனர்.  இந்த குரூப் 2, 2 ஏ முதல்நிலை தேர்வு முடிவுகள்  ஜூன் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.