மிலாது நபி - இஸ்லாமிய மக்களுக்கு தினகரன் வாழ்த்து!!

 
ttv

இஸ்லாமிய மக்களுக்கு இனிய மிலாது நபி வாழ்த்துகளை  தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் , "அண்ணல் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை  மிலாது நபியாகக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.   “இறைவன் உங்கள் பக்கம் இருக்கும்போது எந்த சக்தியாலும் உங்களை எதுவும் செய்துவிட முடியாது” என்ற நபிகளாரின் நம்பிக்கையை என்றைக்கும் மனதில் கொள்வோம். பெற்றோரை வணங்குதல், உழைப்பைப் போற்றுதல், மன்னித்தலின் மாண்பு என உன்னத வாழ்வியலுக்கு நபிகள் போதித்த கருத்துகளை மறவாது பின்பற்றிடுவோம். இறை தூதராக அவதரித்து, நம்பிய மக்களைக் காத்து நின்று, நல்லிணக்கத்தைப் போற்றி, ‘அன்பு தான் உலகில் ஆகப்பெரிய சக்தி’ என்பதை போதித்த நபி பெருமகனாரின் பிறந்தநாளில் உலகில் அமைதியும், மகிழ்ச்சியும் அனைவரிடமும் நிலைத்து நிற்கட்டும் என வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

TTN
அதேபோல் இந்திய தேசிய லீக் மாநில பொதுச்செயலாளர் ஜகிருத்தீன் அஹமது வெளியிட்டுள்ள அறிக்கையில் , "மனிதநேயம் தழைக்க நல்வழி காட்டிய நபிகள் நாயகம் அவதரித்த திருநாளை மகிழ்வோடு கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு இந்திய தேசிய லீக் சார்பில் மிலாதுநபி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். அண்ணல் நபிகளாரின் அர்த்தமுள்ள போதனைகளும், அற்புதமான அறிவுரைகளும் ஒவ்வொருவர் வாழ்விலும் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய அரிய கருவூலங்கள். அண்ணல் நபிகளாரின் வழிகாட்டுதலை முழுமையாக கடைப்பிடித்து வாழும் இஸ்லாமிய சமுதாயத்தின் மீது அனைத்து தரப்பு மக்களும் அன்புடனும், பாசத்துடன் பழகி வருவதை பார்த்து வருகிறோம். உழைப்பவரின் வியர்வை காய்வதற்குள் அவருக்கான ஊதியத்தை  கொடுத்துவிடுங்கள் என உழைப்பை உயர்வாக மதிக்க  கற்றுத்தந்தவர் நபிகள் நாயகம். இறைவன் உங்கள் பக்கம் இருக்கும்போது எந்த சக்தியாலும் உங்களை எதுவும் செய்துவிட முடியாது என்ற நபிகளாரின் நம்பிக்கையை என்றைக்கும் மனதில் கொள்வோம்.

ttv

இறை தூதரான நபிகள் நாயகம் தனது வாழ்நாள் முழுவதும் மதநல்லிணக்கம், சகோதரத்துவம், சமத்துவம் ஆகிய உயரிய நோக்கங்களுக்காக இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டிய வரலாற்றுப் பெருமைமிக்கவர். நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாள், மிலாது நபி திருநாளாக உலகம் முழுவதும் வாழ்கிற இஸ்லாமிய பெருமக்களால் மிகுந்த பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் மதநல்லிணக்கம், சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவை நாட்டில் உருவாக அனைத்து தரப்பினரும் சபதம் ஏற்போம்" என்று கூறியுள்ளார்.