கடும் எதிர்ப்பு எதிரொலி - திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்தி அறிவிப்பு பலகை அகற்றம்

 
tirupur

திருப்பூர் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்ட இந்தி அறிவிப்பு பலகைக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த அறிவிப்பு பலகை அகற்றப்பட்டது. 

திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தகவல் தொடர்பு மைய அலுவலகத்திற்கு வெளியே, வழக்கமாக தமிழில் தகவல் தொடர்பு மையம் எனவும் ஆங்கிலத்தில் இன்பர்மேஷன் சென்டர் எனவும், இந்தியில் அதன் மொழியிலும் எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில், புதிதாக அச்சிடப்பட்ட அந்த அறையின் அறிவிப்பு பலகையில், மூன்று மொழிகளிலுமே அந்த வார்த்தையின் இந்தி அர்த்தமான சகயோக் என எழுதப்பட்டிருந்தது. அதிக அளவில் வடமாநில தொழிலாளர்கள் வருவதால் அவர்களுக்கு புரியும் வகையில் எழுதப்பட்டிருப்பதாக பலரும் எண்ணிய நிலையில் அதன் மேலே ஆங்கிலம், தமிழிலும் சகயோக் என அச்சிடப்பட்டிருந்தது. இதனால் அதன் அர்த்தம் பலருக்கும் புரியாத சூழல் ஏற்பட்டது. ரயில்வே நிர்வாகத்தின்  இந்த அறிவிப்பு முற்றிலும் இந்தி திணிப்பை உணர்த்துவதாக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. 

tirupur


  
இதேபோல் ரயில்வே நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ரெயில்வே அதிகாரிகள் சேவை மையத்தின் முன்பு இந்தியால் எழுதி ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பு பெயர் பதாகையை கிழித்து அகற்றினர்.


இதனிடையே இந்தி ஸ்டிக்கர் அகற்றப்படும் வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் பதிவுட்டுள்ள திருப்பூர் தெற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்  திருப்பூர் செல்வராஜ், இந்தி திணிப்புக்கு இங்கு இடமில்லை என குறிப்பிட்டுள்ளார்.