குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதள கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் - சோம்நாத்

 
ISRO Somnath

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக 2,233 ஏக்கர் நிலம் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. நிலம் முழுமையாக கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கட்டுமான பணிகள் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் ராக்கெட் ஏவுதளம் அமையவுள்ள குலசேகரன்பட்டினம் பகுதியில் ஆய்வு செய்தார். பின்னர் கட்டுமாண பணிகளை தொடங்குவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆய்வின் போது ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ அதிகாரிகள், துாத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், வருவாய் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். 

ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறியதாவது: இந்தியாவின் தெற்கு எல்லையில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மிகச் சரியான இடம் கிடைத்துள்ளது. ஆய்வும் திருப்திகரமாக அமைந்தது. மத்திய அரசு அனுமதி, பாதுகாப்பு துறை அனுமதிக்காக காத்திருக்கிறோம். இந்த பகுதியில் இருந்து பெரிய ராக்கெட்டுகள் ஏவ முடியாது. எஸ்.எஸ்.எல்.வி., எனப்படும் சிறிய வகை ராக்கெட்டுகள் ஏவப்படும். விரைவில் கட்டுமான பணிகள் துவங்கும். இவ்வாறு கூறினார்