கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலை மாயமான விவகாரம் - தெப்பக்குளத்தில் ஆய்வு செய்ய திட்டம்

 
kapaleeswarar


சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலை மாயமான விவகாரத்தில் தெப்பக்குளத்தில் மீண்டும் ஆய்வு செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் திட்டமிட்டுள்ளனர். 

கடந்த 2004-ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் புன்னைவன நாதர் சன்னதியில் இருந்த தொன்மை வாய்ந்த மயில் சிலை மாற்றப்பட்டு, உண்மையான சிலை திருடப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை மற்றும் அறநிலையத் துறையின் உண்மை கண்டறியும் குழு தங்களது விசாரணையை 6வார காலத்திற்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயிலின் தெப்பக்குளத்தில் சிலை வீசப்பட்டு இருக்கலாம் என சந்தேகத்தில், கடந்த வாரம் தீயணைப்புத்துறையினர் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி வீரர்கள் மூலம் சிலையை தேடும் பணி நடந்தது.

kapaleeswarar

இந்த நிலையில் அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் குளத்தின் அடியில் சென்று தேட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு திட்டமிட்டுள்ளனர்.  இதற்காக, சென்னை பள்ளிக்கரணையில் அமைந்துள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.கடல்வளம், கடல்வாழ் உயிர்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய பல்வேறு தொழில்நுட்ப கருவிகளை கொண்டுள்ள இந்நிறுவனம் டார்னியர் விமானம் கடலில் விழுந்த போது தேடும் பணியில் முக்கிய பங்காற்றியது குறிப்பிடதக்கது.