மதிய உணவு சாப்பிட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு" - தமிழக அரசுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை!!

 
tn

கண்டியூர் அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.கே. வாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 7  மாணவ, மாணவியரின் உடல்நலன் பாதிக்கப்பட்டது வேதனைக்குரியது. நேற்று வலங்கைமான் அருகே உள்ள கண்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் வழக்கம் போல மதிய உணவு சாப்பிட்டனர். பிறகு மதியம் 3 மணி அளவில் 7 மாணவர்கள் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக முதலுதவி சிகிச்சைக்காக ஆலங்குடி சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

tn

இதையடுத்து மதிய உணவு சாப்பிட்ட 37 மாணவ, மாணவியரை கும்பகோணம் அரசு தலைமை மருத்துமனையில் அனுமதித்தனர். இதனால் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும், அப்பகுதி வாழ் மக்களும் கவலை அடைந்தனர். உடல்நலன் பாதிக்கப்பட்ட 7 மாணவ, மாணவியர் உள்ளிட்ட மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் அனைவருக்கும் உயர்தர தீவிர மருத்துவ சிகிச்சை அளித்து, விரைவில் குணமடைந்து வீடு திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

gk

மதிய உணவு சாப்பிட்டதால் ஏற்பட்ட உடல்நலக்குறைவுக்கு காரணம் என்ன என்பதற்காக உரிய விசாரணையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். கல்விக்கண் திறந்த காமராஜர் அவர்கள் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டமானது ஏழை, எளிய குடும்பக் குழந்தைகள் பள்ளிக்கு வர வேண்டும், கல்வி கற்க வேண்டும், வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகத் தான்.  எனவே அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுத் திட்டமானது மிகவும் முக்கியமானது, அவசியமானது. வழங்கப்படும் உணவு தரமானதாக, சத்துள்ளதாக, சுத்தமானதாக இருக்க வேண்டும். உணவு சமைக்கும் சமையல் அறை உள்ளிட்ட அதன் சுற்றுப்புற இடம் சுகாதாரமாக இருக்க வேண்டும். 

govt

குறிப்பாக தமிழக அரசு, மாநிலம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படும் முறையில் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். நேற்று கண்டியூர் அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களின் உடல்நலன் பாதிக்கப்பட்டது போல் இனிமேல் எந்த ஒரு அரசுப் பள்ளியிலும் மதிய உணவு சாப்பிடும் மாணவர்களின் உடல்நலன் பாதிக்கப்படாது என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமை. 

தமிழக அரசு, அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுத்திட்டத்தை மாணவர்களின் உடல்நலனில் அக்கறை கொண்டு குற்றச்சாட்டுக்கு இடம் கொடுக்காத வகையில் முறையாக செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று த.மா.கா சார்பில் வலியுறுத்தியுள்ளார்.