"தமிழ்நாட்டில் வெப்பத்தணிப்பு செயல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்" - அன்புமணி கோரிக்கை!!

 
pmk

தமிழ்நாட்டில் வெப்பத்தணிப்பு செயல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கோடை வெப்பம் கடந்த காலங்களில் இல்லாத அளவில் அதிகரித்து வருவதை உணர முடிகிறது. ஒவ்வொரு ஆண்டு கோடை வெப்பம் அதிகரிக்கும் போதெல்லாம், அதை சகித்துக் கொள்ள முடிவதில்லை என்று சபித்துக் கொண்டு மட்டும் கடந்து செல்வதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. சரியான திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதால் மட்டும் தான் வெப்பத்திலிருந்து தப்பிக்க முடியும்.இந்தியாவில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் இவ்வாண்டு மார்ச் மாதத்தில் நிலவியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சென்னையில் வழக்கமான மார்ச் மாத வெப்பநிலையான 33 டிகிரி செல்சியஸ் அளவைக் கடந்து, மார்ச் 22-ல் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இனிவரும் காலங்களில் நிலைமை மோசமடையக் கூடும் என்பதற்கான முன்னெச்சரிக்கை இதுவாகும்.

pmk

புவிவெப்பமடைதல் காரணமாக பூமியின் சராசரி வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரித்து 1.5 டிகிரி செல்சியஸ் அளவை விரைவில் எட்டிவிடும். அதனால், ஏற்படக்கூடிய  அதிதீவிர வெப்ப அலை உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் தமிழ்நாடும் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.  இதை உணர்ந்து பாதிப்புகளை எதிர்கொள்ளவும், கட்டுப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக சென்னை, வேலூர், சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாநகரங்கள், அதிவெப்ப மாவட்டங்களுக்கான வெப்பத்தணிப்பு செயல்திட்டத்தை உடனே உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.வெப்பத்தை எதிர்கொள்ளும் திட்டங்களை செயல்படுத்துவதில் அகில இந்தியாவுக்கும் முன்மாதிரியாக அகமதாபாத் நகரம் உள்ளது. அங்கு 2013-ஆம் ஆண்டு முதல் வெப்பத் தணிப்பு செயல் திட்டம் (Ahmedabad Heat Action Plan) செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தால் அகமதாபாத்தில் வெப்பத்தால் உயிரிழப்போர் எண்ணிக்கை 40% வரை குறைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆண்டுக்கு 1,190 உயிரிழப்புகள் தவிர்க்கப்படுகின்றன. அகமாதாபாத் முன்மாதிரியை பின்பற்றி ஆந்திரம், பீகார், மராட்டியம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் மாநகரங்களுக்கான வெப்பத்தணிப்பு செயல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

summer

அதிவெப்பம் என்பது ஒரு பொதுச் சுகாதார சிக்கல் ஆகும். சமவெளிப்பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் அளவும், மலைப்பகுதிகளில் 30 டிகிரி செல்சியஸ் அளவும் வெப்ப அலையாக வகைப்படுத்தப் பட்டுள்ளது. சென்னை போன்ற கடலோரப் பகுதிகளில் 37 டிகிரி செல்சியசை கடந்தால் அது வெப்ப அலையாகும். சராசரி வெப்பநிலையை விட 4.5 டிகிரி கூடுதலாக பதிவானாலும் அது வெப்ப அலை தான்.அதிகமாகும் கோடை வெப்பம் மிகவும் ஆபத்தானது. இதனால் பலவிதமான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. சுற்றுப்புறத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது உடலின் வெப்பமும் அதிகமாகிறது. அதனை சமாளிக்க உடல் வியர்வையை வெளியேற்றுகிறது. ஆனாலும், மனித உடலால் ஓரளவுக்குத்தான் வெப்பத்தை குறைக்க முடியும். மிக அதிக வெப்பத்தால் வெப்பச் சொறி, வேனல் கட்டி, வெப்பப் பிடிப்பு, வெப்பத் தசைவலிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் வெப்பத் தளர்ச்சி ஏற்படுகிறது. அதிக வெப்பத்தால் ஏற்படும் வெப்ப மயக்க நோய்  மிக ஆபத்தானதும் உயிரிழப்பை ஏற்படுத்துவதுமாகும்.

pmk

சிறார்கள், கர்ப்பிணிகள், மூத்த குடிமக்கள் வெப்பத்தால் அதிகம் பாதிப்படைகின்றனர். சுவாச நோய்கள், இருதய நோய்கள், நீரிழிவு குறைபாடு உடையவர்களும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.  வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்கள், உயர்வெப்ப சூழலில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஓட்டுனர்கள், குடிசைவாசிகள் உள்ளிட்டோர் வெப்பத்தால் மிக அதிக அளவில் பாதிப்படைகின்றனர். வெள்ளம், புயல் பேரிடர் போன்றே வெப்ப பாதிப்புக்கான முன்னறிவிப்புகளை செய்தல், வெப்ப ஆபத்துகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்குதல், அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளோரைக் குறிவைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் அவசரகால நடவடிக்கை கட்டமைப்புகளை உருவாக்குவது வெப்பத் தணிப்பு செயல் திட்டத்தின் ஒரு பகுதி ஆகும். தேவையான மருத்துவக் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல், அரசுத்துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல், பள்ளிகள், தொழிற்சாலைகள், திறந்தவெளி வேலைகள் போன்றவற்றில் வெப்பநிலைக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்துதல், எளிதில் பாதிக்கப்படும் சூழலில் உள்ள மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், போதுமான குடிநீர் கிடைக்கச் செய்தல், வெயிலில் இருந்து தப்பிப்பதற்கான நிழலான இடங்களை அமைத்தல் உள்ளிட்ட பல பணிகளும் அவசரகால செயல்திட்டத்தில் அடங்கும்.

நகர்ப்புற வீடுகள், கட்டடங்களின் மேற்கூறைகளை வெள்ளை வண்ணத்திலும், சூரிய ஆற்றலை ஈர்க்காத முறையிலும் அமைப்பதன் மூலம் வீடுகளுக்குள்ளும் நகரங்களிலும் வெப்பத்தை கணிசமாக குறைக்க முடியும். நகரங்களில் மரங்களை வளர்ப்பதன் மூலம் வெப்பநிலையை 8 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க முடியும். நீர்நிலைகளை பாதுகாத்தல், காற்று மாசுபாட்டை தடுத்தல், பொதுப் போக்குவரத்தை அதிகமாக்குதல், போக்குவரத்தை சீர்படுத்துதல் ஆகியவையும் நகர்ப்புற வெப்பத்தை சமாளிக்கும் வழிகளே.இவ்வாறான நடவடிக்கைகளை உள்ளடக்கிய வெப்பத் தணிப்பு செயல்திட்டத்தை, தமிழகத்தின் மாநகரங்கள், நகரங்கள், மாவட்டங்கள்தோறும் அரசு உடனடியாக உருவாக்கி செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் கோடை வெப்பத்தால் தமிழக மக்கள் பாதிக்கப்படுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.