கடந்த 12 நாட்களில் ஹெல்மெட் அணியாதவர்களிடம் இருந்து ரூ. 40 லட்சம் அபராதம் வசூல்..

 
கடந்த 12 நாட்களில் ஹெல்மெட் அணியாதவர்களிடம் இருந்து ரூ. 40 லட்சம் அபராதம் வசூல்..

சென்னையில் ஹெல்மெட் அணியாதவர்களிடமிருந்து  அபராதமாக இதுவரை ரூ. 40 லட்சம்  வசூலிக்கப்பட்டுள்ளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி முதல்  ஹெல்மெட் அணியாதவர்களிடமிருந்து போக்குவரத்து காவல்துறையினர்  மீண்டும் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தினர்.  அத்துடன் வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும்  ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  அவ்வாறு ஹெல்மெட் அணியாதவர்களிடமும்  அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.  அந்தவகையில் கடந்த 12 நாட்களில்  ஹெல்மெட் அணியாமல்  இருசக்கர வாகனம்  ஓட்டிச் சென்ற  21, 984 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதேபோல் ஹெல்மெட் அணியாமல்  பின்னால் அமர்ந்து பயணித்த  18,035 பேர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்

கடந்த 12 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை ஓட்டிச் சென்றவர்களிடம் ரூ.21 லட்சத்து 98 ஆயிரத்து 400 அபராதமாகவும்,  பின்னால் அமர்ந்து சென்றவர்களிடம் 18 லட்சத்து 3 அயிரத்து 500 ரூபாயும் என மொத்தம்   ரூ.40 லட்சம் வரை அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன்  வாகன விதிமீறல் புகார் தொடர்பான பழைய வழக்குகளில்  இருந்தும் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதற்காக 10 அழைப்பு மையங்கள் அமைக்கப்பட்டு,  தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அபராதம் வசூலித்து வருகின்றனர்.  அதன்படி 2019 ஆம் ஆண்டு மார்ச் முதல் பதியப்பட்ட  1 லட்சத்து 27 ஆயிரத்து 66  பழைய வழக்குகளுக்கான அபராதத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 நாட்களில் இந்த பழைய வழக்குகளில் அபராதத்தொகையாக  1 கோடியே 93 லட்சத்து 75 ஆயிரத்து 970 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 1000 அபராதம் -  அரசு அதிரடி அறிவிப்பு..

 இதில் 67 வாகன ஓட்டிகள் 100க்கும் அதிகமான விதி மீறல்களில் ஈடுபட்டு அபராதம் செலுத்தியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.  அதில் ஒரு வாகன ஓட்டி மட்டும் தன்னுடைய ஒரே  வாகனத்தின் மூலம்  274 விதிமீறல்களில் ஈடுபட்ட அபராதம் செலுத்தியிருக்கிறார்.  மதுபோதையில்    வாககம் ஓட்டிய 1,181 பேரிடமிருந்து மட்டும்  1 கோடியே 19 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது.   இதில் பெரும்பாலனோர் சராசரியாக ரூ.10000 அபராதம் செலுத்தியுள்ளனர்.  

மொத்தமாக 1.28,247 பழைய  வழக்குகளில் ரூ. 3 கோடியே 12 லட்சத்து 87 ஆயிரத்து 920 வசூலிக்கப்பட்டிருக்கிறது.  புதிய வழக்குகளுக்காக  3 கோடியே 37 லட்சத்து 34 ஆயிரத்து 800  ரூபாயும் இதுவரை அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை  காவல்துறையினர் மட்டும்  கடந்த 50 நாட்களில் 2, 73 ,284 வழக்குகளில்  6 கோடியே 50 லட்சத்து 22 ஆயிரத்து 770  ரூபாயை அபராதமக வசூலித்திருக்கின்றனர்.