ஜெயக்குமார் மீதான 2 வது வழக்கில் மார்ச் 9-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்!

 
ttn

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது சென்னை ராயபுரம் பகுதியில் திமுக பிரமுகர் ஒருவர் கள்ள ஓட்டு செலுத்துவதாக கூறி அதிமுகவினர் அவரை நிர்வாணமாக்கி தாக்கினர். இந்த சம்பவத்தின்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உடனிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது . இது குறித்து சென்னை தண்டையார்பேட்டை காவல்துறையில் பாதிக்கப்பட்ட திமுக தொண்டர் புகார் அளித்தார்.  புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். 

tn

கைது செய்யப்பட்ட அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறையினரால் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார் . இதையடுத்து அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது . இதனால் இரவோடு இரவாக  பூந்தமல்லி சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.இந்த சூழலில் வாக்குப்பதிவு தினத்தன்று திமுகவினர் மீது அதிமுகவினர் கொடுத்த புகார் குறித்து காவல்துறை சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி ஜெயக்குமார் மற்றும் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு உத்தரவை மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுதல் மற்றும் தொற்றுநோய் பரவ காரணமாக செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் மீண்டும் இன்று கைது செய்யப்பட்டார்.

tn

இந்நிலையில் தடையை மீறி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதாக இரண்டாவது வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் ஜெயக்குமாரை அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் . முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சிறையில் முதல் வகுப்பு தரவில்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்த நிலையில் ,இது குறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் பரிந்துரைப்பதாக நீதிபதி உறுதி அளித்துள்ளார்.