அதிகரிக்கும் ஒமைக்ரான் : மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாநில அரசுகளுடன் இன்று ஆலோசனை ..

 
மன்சுக் மாண்டவியா


உருமாற்றம் அடைந்துள்ள ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மாநில சுகாதார அமைச்சர்களுடன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்துகிறார்..

சீனா, ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்த புதிய வகை ஓமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.   குறிப்பாக அண்டை நாடான சீனாவில் ஒமைக்ரான் வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. மரபணு மாற்றம் அடைந்த ஒமைக்ரான்  இந்தியாவிலும் பரவியுள்ள நிலையில்,  கொரோனா கட்டுப்பாடுகளை மீண்டும் தீவிரப்படுத்துவது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.  இதன் ஒரு பகுதியாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன்,  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்.

அதிகரிக்கும் ஒமைக்ரான் : மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டயா, மாநில அரசுகளுடன் இன்று ஆலோசனை ..

காணொலி  நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. முன்னதாக கொரோனா பரவல் தடுப்பு குறித்து நேற்று காணொளி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி , பல்வேறு அறிவுறைகளை வழங்கினார்.  புதிய வகை கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களில் மக்கள் முககவசம்  அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்றும்,  கொரோனா பரிசோதனையை மாநிலங்கள் அதிகரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.  மருத்துவமனைகளில் போதிய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும்,  ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும்  வென்டிலேட்டர் இருப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

கொரோனா

முதியோர் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் கூடுதல் டோஸ்  தடுப்பூசி செலுத்தி கொள்வதை உறுதி செய்தல் அவசியம் என்று கூறிய அவர்,  அத்தியாவசிய மருந்துகளின் இருப்பு மற்றும் அவற்றின் விலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்..