"அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அலட்சிய படுத்தினால்..." தனியார் மருத்துவமனைக்கு எச்சரிக்கை!!

 
tn tn

உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏழை மக்கள் இலவசமாகப் பெற வகை செய்யும் ஒரு காப்பீட்டுத் திட்டமாகும். குறிப்பாக உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணம் இல்லாமல் ஏழை எளிய மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன் முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டு திட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது .

tn

இதையடுத்து இது விரிவாக்கம் செய்யப்பட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் முதலமைச்சரின் விரிவான மருத்துவ திட்டம்,  பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்துடன் இணைந்து  செயல்பட்டு வருகிறது.  பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் முதலமைச்சரின் விரிவான  மருத்துவ காப்பீடு திட்டம் ஏழை எளிய திட்ட பயனாளிகள் அதிகபட்சமாக ஆண்டு ஒன்றுக்கு குடும்பத்திற்கு ரூபாய் ஐந்து லட்சம் வரை கட்டணம் இல்லாமல் சிகிச்சை பெற இதன் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அத்துடன்  பத்திரிக்கையாளர்களின்  நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களுக்கும் எந்தவித உச்ச வரம்பின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சையளிக்க உத்தரவிடப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் பொதுத் துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

tn


இந்நிலையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக  சிறப்பு முகாம் துவக்கி வைக்கப்பட்டது.  இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனியார் மருத்துவமனைகள் அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அலட்சிய படுத்தினால், புகார் அடிப்படையில் அந்த மருத்துவமனையின் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார்.  அத்துடன் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் காப்பீடு திட்டத்தில் இருந்து விலக்கி  வைக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு ஆண்டு வருமான வரம்பு நீக்கப்பட்டு முதல்வர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்படுவார்கள். 1,700 மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டம் செயல்பட்டு வருகிறது என்றார்.