வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் ஒட்டும் பணி தீவிரம்!!

 
vote

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது .இதற்கு இன்னும் ஒரு வார காலமே இருக்கும் நிலையில் தேர்தல் ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.  ஒருபுறம் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில், மறுபுறம் தேர்தலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் விதிமீறல் நடக்கிறதா உள்ளிட்ட பலவற்றையும் தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.  தமிழக காவல்துறையும் விதிமீறலில்  ஈடுபடும் வேட்பாளர்களை வீடியோ எடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

vote

இந்த சூழலில் இன்று முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பூத் சிலிப் அளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்துடன் வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்துவதற்காக வேட்பாளர்கள் பெயர் ,சின்னங்கள் அடங்கிய பேப்பர் அச்சடிக்கப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

election

இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் ஒட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் 15 மையங்களில் தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பணிகள் நடைபெறுகின்றன. 5,794 வாக்குச்சாவடிகளுக்கு மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.