இன்றைக்குள் காலாவதியாகிவிடும்.. இனி ஒரு உயிர் போனாலும், ஆளுநர் தான் பொறுப்பு.. - அன்புமணி ராமதாஸ்

 
Online Rummy - Anbumani Ramadoss Online Rummy - Anbumani Ramadoss

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் இனி ஒரு தற்கொலை நடந்தாலும் அதற்கு ஆளுநர் தான் காரணம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்காக கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி இன்றுடன் காலாவதியாகிறது. அதற்கு மாற்றாக இயற்றப்பட்ட சட்டத்திற்கு ஆளுனரின் ஒப்புதல் கிடைக்காததே இந்த நிலைக்கு காரணம்! இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 213(2)(ஏ)-இன்படி  சட்டப்பேரவை கூடிய நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்டம் காலாவதியாகி விடும். அக்டோபர் 17-ஆம் தேதி சட்டப்பேரவை கூடி இன்றுடன் 6 வாரங்கள் நிறைவடைவதால் அவசரசட்டம் காலாவதியாகிறது!

ஆன்லைன் சூதாட்டம்

ஆன்லைன் சூதாட்டத் தடை காலாவதியானால் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட்டம் மீண்டும் முழுவீச்சில் தொடங்கிவிடும். தமிழ்நாட்டில் கடந்த 15 மாதங்களில் 32 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதை தடுக்க ஆன்லைன் சூதாட்டத் தடை மிகவும் அவசியம். ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் சட்டப்பேரவையில் இயற்றி ஆளுனருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆளுனரின் ஐயங்களுக்கும் அரசு தெளிவான பதில் அளித்திருக்கிறது. அதை ஏற்று ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனர் இன்றைக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

முதன்முறையாக ஆளுநர் ஆர்.என் ரவி

மேலும், நாகையில் கட்சி நிர்வாகிகளை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி  ராமதாஸ், அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “ ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்று கடைசி நாள் என்பதால் ஆளூநர் இன்றுக்குள் கையெழுத்திட வேண்டும். தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தும்,  தமிழக ஆளுநர் அலட்சியம் காட்டுவது நியாயமானது அல்ல. தமிழ்நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ஆளுநரும்,  தமிழக முதல்வரும் ஈகோ இல்லாமல் செயல்பட வேண்டும்.  ஆளுநர் தமிழகத்தில் அரசியல் செய்யக்கூடாது. ஆன்லைன் சூதாட்டத்தில் இனி ஒரு உயிர் போனாலும் அதற்கு ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும்:” என்று கூறினார்.