'அம்மா உணவகத்தில் ஜெ.படம் நீக்கம்' - முதல்வர் உத்தரவை மதிக்கவில்லை என குற்றச்சாட்டு!!

 
udhayakumar

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு தொடர்ந்து அம்மா உணவகங்கள் செயல்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.  அதன் அடிப்படையில் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.  அதேசமயம் அம்மா உணவகங்களில் திமுகவினர் சிலர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படத்தை வைத்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியது.  இதையடுத்து மதுரையில் உள்ள அம்மா உணவகத்தில் மறைந்த முன்னாள் ஜெயலலிதா புகைப்படம் அகற்றப்பட்டு அம்மா உணவகம் என்ற பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. 

amm

அம்மா உணவகம் திட்டத்தை நிறுத்தி வைக்கவோ,  பெயர் மாற்றம் செய்யவோ எந்தவித திட்டமும் தங்களுக்கு இல்லை என்று முதல்வர் முக ஸ்டாலின் தெளிவாக அறிவித்த நிலையில் தற்போது ஜெயலலிதாவின் புகைப்படம் அகற்றப்பட்டது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரை மாவட்ட ஆட்சியர்  மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் கடிதம் வழங்கியுள்ளார்.  அதில், தமிழ்நாடு முழுவதும் 700 அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்ட நிலையில் நாள்தோறும் 12 லட்சத்திற்கும் அதிகமான பசியை ஆற்றி வருகின்றனர். ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இத்திட்டம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது.  

udhayakumar

மதுரையில் தற்போது 12 அம்மா உணவகம் உள்ளது.  ஒரு சில இடங்களில் கடந்த பல ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் அகற்றப்பட்டு விட்டது. தமிழ்நாட்டு மக்களுக்கு இது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது .முதல்வர் மு.க. ஸ்டாலின் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும், அதில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்து இருக்கிறார் . ஆனால் மதுரை மாநகராட்சியில் நடந்திருப்பது அவரது உத்தரவை மதிக்காதது போல் உள்ளது என்று தெரிவித்து,  இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார்.