கொடநாடு கொலை,கொள்ளை வழக்கு - சசிகலாவிடம் 2வது நாளாக விசாரணை

 
sasikala

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது.  இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மனோஜ் சயான் உள்பட 10 பேரை இந்த வழக்கில் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் போலீசார் தேடி வந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் 2017ஆம் ஆண்டில் சேலத்தில் நடந்த ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார்.  கொடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்த தினேஷ் திடீர் தற்கொலை செய்து கொண்டார். கனகராஜ் மரணம் , தினேஷ் தற்கொலை என்று அடுத்தடுத்து பல சந்தேகங்களை கிளப்பி வந்தது கொடநாடு வழக்கு.   இந்த கொலை, கொள்ளை வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

Kodanadu

.

கொடநாடு சம்பவத்தில் சந்தேகம் இருந்து வந்ததால் இந்த படுகொலை வழக்கில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆகஸ்ட் மாதம் மறுவிசாரணை தொடங்கியது. மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குழுவாக பிரிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .கொடநாடு எஸ்டேட் மேலாளர்,  சசிகலாவின் உறவினர்கள்,   முன்னாள் எம்எல்ஏ ஆறு குட்டி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் இடம் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இந்த கொடநாடு எஸ்டேட்டின் உரிமையாளர்களில் ஒருவரும்,  ஜெயலலிதாவின் தோழியுமான சசிகலாவிடம் விசாரணை நடத்த தனிப்படையினர் சம்மன் அனுப்பி இருந்தனர்.

sasikala

ஐசி  சுதாகர் தலைமையிலான போலீசார் சென்னை தி. நகரில் உள்ள சசிகலா வீட்டிற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்த முடிவு செய்திருந்தனர். அந்த அடிப்படையில் நேற்று 10:55 மணிக்கு சுதாகர் தலைமையிலான 8 பேர் சசிகலாவின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். கொடநாடு சம்பவத்தின்போது சசிகலா சிறையில் இருந்தார்.  அதனால் இந்த தகவலை அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் அளித்து வந்ததால் விசாரனையின் போது சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் உடன் இருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், சென்னை தியகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள சசிகலா இல்லத்தில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் இன்று இரண்டவது நாளாக விசாரணை நடைபெற்றுவருகிறது. மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் இன்று காலை 9.55 மணியளவில்  இரண்டாம் நாளாக விசாரணையை துவங்கி உள்ளகினர். விசாரணையின் போது வீடியோ  பதிவு  செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.