எய்ம்ஸ் ஆரம்பகட்ட பணிகள் 95% முடிந்தது என்று தான் ஜே.பி நட்டா கூறினார் - எல்.முருகன் விளக்கம்

 
L Murugan

எய்ம்ஸ் ஆரம்பகட்ட பணிகள் 95% முடிந்தது என்று தான் ஜே.பி நட்டா கூறினார் எனவும், அவரது கருத்து சரியாக புரிந்துக்கொள்ளப்படவில்லை எனவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

நேற்று முன் தினம் மதுரை அருகே நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 95% பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறினார். மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற 550 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாகவும், அதற்காக 633.17 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கேட்ட நிலையில், தமிழக அரசு 543 ஏக்கர் நிலத்தை மட்டுமே கொடுத்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இருந்தும் சர்வதேச விமான நிலையத்திற்கான பணிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். இதனிடையே பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியபடி, 95% பணிகள் நிறைவு பெற்ற மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடம் எங்கே? என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன் மற்றும் மாணிக்கம்தாகூர் ஆகியோர் கேள்வி எழுப்பினர். 

l

இந்நிலையில், ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95 சதவீதம் முடிந்ததாக பேசியது குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன் கூறியதாவது: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் விளம்பர அரசியல் செய்கிறார்கள். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் கருத்து சரியாக புரிந்துக்கொள்ளப்படவில்லை.எய்ம்ஸ் ஆரம்பகட்ட பணிகள் 95% முடிந்தது என்று தான் ஜெ.பி நட்டா கூறினார்;அவர் கூறியதை புரிந்து கொள்ளாமல் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் விமர்சனம் செய்கின்றனர்.என கூறினார்.