ரஜினிகாந்த் ஊரில் இல்லை....ரசிகர்கள் காத்திருக்க வேண்டாம் - லதா ரஜினிகாந்த் வேண்டுகோள்

 
Latha Latha

நடிகர் ரஜினிகாந்த் ஊரில் இல்லை, அதனால் ரசிகர்கள் யாரும் காத்திருக்க வேண்டாம் என்று லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். அத்துடன் பல நலத்திட்ட உதவிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அவரது பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், நடிகர் கமல் ஹாசன், தனுஷ் உள்ளிட்ட பலர் வாழ்த்து கூறியுள்ளனர். 

ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, அவரது ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். மழையையும் பொருட்படுத்தாமல் இன்று அதிகாலை முதலே ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்க அவரது ரசிகர்கள், போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஊரில் இல்லை, அதனால் ரசிகர்கள் யாரும் காத்திருக்க வேண்டாம் என்று லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறும்போது, "ரஜினிகாந்த் ஊரில் இல்லை. அவர் சார்பாக எல்லாருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஊரில் இருந்திருந்தால் கண்டிப்பாக வந்து ரசிகர்களைச் சந்தித்திருப்பார். மழையில் யாரும் காத்திருக்க வேண்டாம்" என்று கூறினார்.