ராமஜெயம் கொலை வழக்கு - குற்றவாளியை நெருங்கியதா சிறப்பு புலனாய்வு குழு?

 
tn

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக இரு ரவுடிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

tn

அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி நடை பயிற்சிக்கு சென்ற போது கொல்லப்பட்டார்.  இந்த வழக்கு தொடர்பாக தற்போது சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது.  ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 198 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கடந்த ஏப்ரல் மாதம் சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.  அத்துடன் இக்கொலை வழக்குசம்பந்தமாக அமைச்சர் கே.என். நேருவிடம் இரண்டு முறை நேரில் சென்றும் ,  ராமஜெயத்தின் மகன் , உறவினர் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

tn

 ராமஜெயம் தொடர்பில் இருந்த அரசியல்வாதிகள், வியாபாரிகளின் அனைவரிடமும் விசாரணை நடத்தி உள்ளதாகவும் , திருச்சி ,சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் முக்கிய குற்றவாளிகளிடம் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது,  அத்துடன்  ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு துலக்க சரியான தகவல் கொடுத்தால் ரூபாய் 50 லட்சம் பரிசளிக்கப்படும் என்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில்  அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் சென்னை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.பாலன் கொலை வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் கணேசன் புதுக்கோட்டை செந்தில் ஆகிய இரு ரவுடிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அத்துடன் புதிதாக 4 பேரிடம் விசாரணை நடைபெற்றதாக சிறப்பு புலனாய்வு குழு தகவல் தெரிவித்துள்ள நிலையில் குற்றவாளியை விரைவில் நெருங்கி விடுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.