"தைரியமாக பாதுகாப்பாக இருக்க வேண்டும்" - உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களுக்கு ஸ்டாலின் ஆறுதல்!!
உக்ரைனிலுள்ள மாணவர்கள் தைரியமாக இருங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
ரஷ்ய ராணுவம் கடந்த 24ஆம் தேதி வரை நாட்டுக்குள் புகுந்து ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில், தமிழ்நாட்டைச் சார்ந்த சுமார் 5000 மாணவர்கள் பெரும்பாலும் தொழில்முறைக் கல்வி பயில்வோர் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் , சிக்கித் தவிக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களை மீட்டு தமிழகத்துக்கு அழைத்து வரும் பொருட்டு மாவட்ட மாநில மற்றும் டெல்லி தொடர்பு அலுவலர்கள் நியமனம் செய்து, உதவிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று காலை 10 மணி வரை தமிழ்நாட்டை சார்ந்த 916 மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோர் தமிழ்நாடு அரசு தொடர்பு அலுவலர்கள் வாயிலாக தொடர்பு கொண்டுள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் உக்ரைனில் இருந்து தாய்நாடு திரும்புவதற்கு ஏற்படும் செலவுகள் அனைத்தையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களிடம் உணவு உள்ளிட்டவை கிடைக்கிறதா என காணொளி மூலம் முதல்வர் முக ஸ்டாலின் கேட்டறிந்தார். உக்ரைன் தமிழர்களை மீட்க சென்னையில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களுடன் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்த முதல்வர் முக ஸ்டாலின், தைரியமாக பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று ஆறுதல் கூறினார். இதுவரை 1,250 பேர் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டுள்ளனர் என்பது கூடுதல் தகவல்.


