மாணவி தற்கொலை - பள்ளிக்கல்வித்துறை போல உயர்கல்வித் துறையும் கல்லூரிகளுக்கு அறிவுறுத்த கோரிக்கை!!

 
kamal

தனியார் கல்லூரியில் கல்விக் கட்டணம் செலுத்தாததற்கு, கல்லூரி வகுப்பின் வெளியே நிற்க வைக்கப்பட்ட காரணத்தால் மாணவி  ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தனியார் கல்லூரியில் கல்விக் கட்டணம் செலுத்தாததற்கு, கல்லூரி வகுப்பின் வெளியே நிற்க வைக்கப்பட்ட காரணத்தால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிசியோதெரபி முதலாமாண்டு படித்து வந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது.

tn

அந்த மாணவி தொடர்ச்சியாக மூன்று நாட்கள் வகுப்பின் வெளியே நிற்க வைக்கப்பட்டதாக செய்திகள் சொல்கின்றன. அதனை அவமானமாகக் கருதி அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த மாணவியின் தந்தை ஒரு கூலித்தொழிலாளி என்பது இங்கு கவனிக்கத்தக்கது. கடுமையான கொரோனா காலத்தில் முறைசாரா தொழிலில் இருப்பவர்கள் எவ்வளவு சிரமப்பட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இதுபோன்ற நேரத்தில் கல்லூரி நிர்வாகம் இந்த மாணவி மீது கடுமை காட்டியது கண்டிக்கத்தக்கது.

kamal

கடந்த வாரம் பள்ளிக்கல்வித்துறையில் இது போன்ற செய்திகள் வந்தபோது, கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை தனியார் பள்ளிகள் உறுதிசெய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.  பள்ளிக்கல்வித்துறை போன்று உயர் கல்வித்துறையில், இது போன்ற அறிவிப்பு வெளியாகாதது வருத்தத்திற்குரியது. இனியும் காலம் தாழ்த்தாமல் உயர் கல்வித்துறை உடனடியாக கல்லூரியிலும் கட்டணம் கேட்டு மாணவர்கள் நிர்ப்பந்திக்கப் படக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும். இனியும் இதுபோன்ற இழப்புகள் நடக்கக்கூடாது என்று மக்கள் நீதி மய்யம் விரும்புகிறது.

tn

மாணவ மாணவிகள் தங்கள் மேல் படிப்பைத் தொடர கல்விக்கடன் போன்ற வாய்ப்புகளை முயற்சி செய்ய வேண்டும். அதே சமயம் தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதை நாம் தெளிவாக உணரவேண்டும். எந்த ஒரு பிரச்சனையிலும் நாம் எதிர்நீச்சல் போட்டு முன்னேறி  வெற்றிபெறமுடியும் என்பதை நினைவில்கொள்வோம்.உங்களையும் மீறி தற்கொலை எண்ணம் உங்களைத் தூண்டுமானால் தக்க ஆலோசனை வழங்க அரசின் மனநல ஆலோசனை எண் "104" உள்ளிட்ட ஏராளமான   நிறுவனங்கள் உள்ளன என்பதையும் மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். சாதிக்கப்பிறந்த நம்  இளைஞர் சமுதாயத்தினர், இடையிடையே வரும் வேதனைகளை வென்று சாதனைகள் படைத்திட உறுதியோடு செயல்பட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளது.