வண்டலூரில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 
mk stalin


சென்னை வண்டலூரில் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெறும் தனியார்துறை  வேலைவாய்ப்பு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

 செங்கல்பட்டு மாவட்ட  நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் ஆகிய துறைகள் இணைந்து வண்டலூரில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை  ஏற்பாடு செய்துள்ளன.  பி.எஸ்.அப்தூர் ரஹ்மான் கிரசன்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில்  நடைபெறும் இந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த முகாமில் 50,000 க்கும்  மேற்பட்ட காலிப்பணியிடங்கள்  பூர்த்தி செய்யப்பட உள்ளன.

Massive job placement camp in Vandalur - started by Chief Minister MK Stalin.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு இன்றே பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன.  முகாமிற்கு  வேலை தேடி வருபவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் இலவச திறன் பயிற்சிக்குப் பதிவுகள் செய்து திறன் பயிற்சி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் வாயிலாகப் பதிவுகள் செய்யப்பட்டு, வேலைக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.

வேலைவாய்ப்பு

வண்டலூரில் நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிறுவனங்களில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார். அத்துடன்  அரசு போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்புதலையும் முதல்வர் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

இம்முகாமில் 8-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப் படிப்பு வரை படித்தவர்களும், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், ஃபார்மசி மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் என அனைவருமே கலந்துகொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக் குறிப்பு ஆகியவற்றைக் கொண்டு நேரில் பங்கேற்கலாம் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.