புத்தக வாசிப்பு நாட்டின் தலையெழுத்தையும் நிர்ணயிக்கும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

 
anbil magesh

புத்தகங்கள் வாசிப்பு என்பது நம் சுய சிந்தனையை வளர்ப்பது மட்டுமின்றி நாட்டின் தலையெழுத்தையும் நிர்ணயிக்கும் சக்தியாகும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

திண்டுக்கல்லில் உள்ள எம்.எஸ்.பி. சோலை நாடார் பள்ளியில்  பொது நூலகத்துறை சார்பில் நூலக நண்பர்கள் திட்டம் தொடக்க விழா  நடைபெற்றது. இந்த விழாவில், அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சக்கரபாணி, எம்.எல்.ஏக்கள் செந்தில்குமார், காந்திராஜன், மேயர் இளமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நூலக நண்பர்களுக்கு அடையாள அட்டை மற்றும் புத்தகப்பைகளை வழங்கினார். 

இதன் பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:- புத்தகங்கள் வாசிப்பு என்பது நம் சுய சிந்தனையை வளர்ப்பது மட்டுமின்றி நாட்டின் தலையெழுத்தையும் நிர்ணயிக்கும் சக்தியாகும். எனவே மேலும் பலர் நூலக நண்பர்களாக சேர முன்வர வேண்டும். நூலக நண்பர்களுக்கு அடையாள அட்டையும், புத்தகப் பையும் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இனி, இல்லங்களை தேடி வருவார்கள். அவர்கள் மூலம் இல்லங்களில் உள்ளவர்கள் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக இல்லம் தேடி கல்வி பணியாற்றும் தன்னார்வலர்கள். பள்ளி நூலக சேவையில் ஆர்வமுள்ள மாணவர்கள். ஆசிரியர்கள் நூலக நண்பர்களாக சேர்ந்து நூலக சேவையை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். இவ்வாறு பேசினார்.