திமுக அரசை கலைக்க பாஜக சதி - அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு குற்றச்சாட்டு

 
nehru

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கலைக்க மத்திய பாஜக அரசு சதிதிட்டம் தீட்டி வருவதாக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு குற்றம்சாட்டியுள்ளார். 

செங்கல்பட்டில், நகர திமுக சார்பில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99 ஆவது பிறந்தநாள் விழாவில் அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டார். விழாவில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கலைக்க மத்திய பாஜக அரசு சதிதிட்டம் தீட்டி வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். தமிழகத்தில் சாதி சண்டை, மதக்கலவரங்களை உண்டு பண்ணி சட்டம் ஒழுங்கை சீரழித்து, இந்த ஆட்சிக்கு கெட்ட பெயரை உண்டு பண்ணி  ஆட்சியை கலைக்க பாஜக திட்டமிட்டு வருவதாக குற்றம்சாட்டினார். அதனால் தான் தமிழகத்தில் ஏற்படும் சிறு பிரச்சனையை கூட பாஜக பூதாகரமாக மாற்றி கொண்டிருக்கிறது என்றார். 

தொடர்ந்து பேசிய கே.என்.நேரு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விமர்சனம் செய்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா, கலைஞரை விட ஸ்டாலின் ஆபத்தானவர் என்று சொல்கிறார். ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காலத்தில், ஆட்சியை எப்படி நடத்துவது, அதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் இருந்த காலத்தில், திறம்பட செயல்பட்டவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என புகழாரம் சூட்டினார். பாஜகவால் நம்மை ஒன்றும் வென்றுவிட முடியாது எனவும், விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெறும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.