இனி ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் மலர் கண்காட்சி நடத்தப்படும் - அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

 
mrk panneerselvam

இனி ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் மலர் கண்காட்சி நடத்தப்படும் என வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் முதன்முறையாக சென்னை கலைவாணர் அரங்கில் தோட்டக்கலைத்துறை சார்பில் எற்பாடு செய்யப்பட்டுள்ள மலர்க்கண்காட்சியை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அவருடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர். சுமார் 4 லட்சம் மலர்களைக் கொண்டு இருவேறு உருவ வடிவங்களில் அலங்கரிக்கப்பட்டிருக்கும் மலர்கண்காட்சியினை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். மலர்கள் மட்டுமல்லாது பலவகை பழங்களைக் கொண்டும்  உருவ வடிவங்கள் அலங்கரிக்கப்பட்டு கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சி  இன்று தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை என மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

flower exibition

கண்காட்சியினை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கூறியதாவது:  சென்னையில் முதல் முறையாக மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளன்று மலர் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டுள்ளது..3 நாட்கள் நடைபெறும் இந்த மலர் கண்காட்சியில் 4 லட்சம் மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஊட்டி கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசங்களில் மட்டும் நடைபெறும் மலர் கண்காட்சி முதல் முறையாக சென்னையில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அங்கெல்லாம் 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும், இந்த கண்காட்சி சென்னையில் முதல்முறையாக நடைபெறுவதால் பாதியாக 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிலும் மாணவர்களுக்கு சிறப்பு சலுகையாக 20 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தொடர்ந்து இனிவரும் எல்லா வருடங்களிலும் சென்னையில் மலர் கண்காட்சி நடத்தப்படும் என்று கூறினார்..