தமிழகத்தில் குரங்கும்மை, தக்காளி காய்ச்சல் பாதிப்பில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
Ma Subramanian

தமிழகத்தில் குரங்கு அம்மை, தக்காளி காய்ச்சல் பாதிப்பில்லை என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

வேலுார், சத்துவாச்சாரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 96.99 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 89.5 சதவீதம் பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். மேலும், 3 கோடியே 50 லட்சம் பேருக்கு, பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. தமிழகத்தில், 27 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. 

ma subramanian

தொடர்ந்து பேசிய அவர், அரசு மருத்துவமனைகளில் காப்பீடு திட்டம் அதிகம் பயன்படுத்த துவங்கி உள்ளனர். சுகாதார துறையில் காலியாக உள்ள மருத்துவர், நர்ஸ், டெக்னீசியன்கள் உட்பட, 4,308 காலி பணியிடங்கள், அக்டோபர் மாத இறுதிக்குள் நிரப்பப்படும். தமிழகத்தில் குரங்கு அம்மை, தக்காளி காய்ச்சல் பாதிப்பில்லை. விமான நிலையங்களில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களை, 24 மணி நேரமும் சுகாதாரத் துறையினர் கண்காணிக்கின்றனர். கேரளா எல்லையில், மூன்று இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், தாய் - சேய் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.