பிளட் ஆர்ட் வரைகிற பணியை நிறுத்தி கொள்ளுங்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

 
ma Subramanian ma Subramanian

ரத்தத்தை வைத்து ஓவியம் வரைபவரகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ரத்தத்தை பயன்படுத்தி வரையப்படும் ஓவியம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அவர், ஓவியத்திற்காக எடுக்கப்படும் ரத்தம் என்பது முறையான பாதுகாப்பு இல்லாத ஒன்றாகும். அதோடு மட்டுமில்லாமல் இரத்தம் எடுக்க பயன்படுத்தப்படுகிற ஊசி எத்தனை பேருக்கு பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியாது. அந்த இரத்தத்தை திறந்த நிலையில் படம் வரைவதற்கு கையாளும்போது, அந்த இரத்தம் எச்.ஐ.வி போன்ற நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களிடமிருந்து எடுக்கப்பட்டால் அது, பலரை பாதிப்புக்கு உள்ளாக்கும். சென்னையில் வடபழனி, தியாகராய நகர் பகுதியில் இருக்கிற பிளட் ஆர்ட் நிறுவனங்களை மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கிருந்து ரத்த ஓவியம் வரைவதற்காக பயன்படுத்தப்படுகிற ரத்தக் குப்பிகள், ஊசிகள் மற்றும் அவர்கள் வரைந்து வைத்திருந்த படங்களை எல்லாம் பறிமுதல் செய்தனர். அதோடு அவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது. 

Blood art

பிளட் ஆர்ட் வரைகிற பணியை நிறுத்திக் கொள்ளுங்கள். ஓவியத்தை வரைவதற்கு ஏராளமான வழிகள் இருக்கிறது. ஒருவருடைய ரத்தத்தை எடுத்துத்தான் வரைய வேண்டும் என்று இல்லை. ரத்தம் என்பது பல உயிர்களை காக்கிற புனிதத் தன்மையுடையது. ரத்ததானம் செய்வது என்பது இன்று அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது என்றாலும், அந்த ரத்தத்தை எடுத்து படம் வரைந்து வீணாக்குவது என்பது சரியான ஒன்று அல்ல. இவ்வாறு அமைச்சர் கூறினார்.