கடந்த ஓராண்டில் மட்டும் 102 டன் போதை வஸ்துக்கள் பறிமுதல் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
masu

தமிழ்நாட்டில், கடந்த ஓராண்டில் மட்டும் 102 டன் தடை செய்யப்பட்ட குட்கா பான்மசாலா போன்ற போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை பெசன்ட் நகரில் பிரம்மா குமாரிகள் அமைப்பு மற்றும் ரேலா மருத்துவமனை சார்பாக போதையில்லா தமிழகம் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு நடைபயணம் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர். சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி நடைபயண பேரணி சென்றனர்.

ma subramanian

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியதாவது: உலக புகயிலை நாள், போதை ஒழிப்பிற்கு விழிப்புணர்வுக்காக பேரணி தொடங்கப்பட்டுள்ளது என்றும் 2013 மே முதல் குட்கா பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.திமுக ஆட்சியில் கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் 4.8 கோடி மதிப்பில் 102 டன் போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் விதிகளுக்கு புரம்பாக குட்கா பான் மசாலா விற்ற 3063 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.21 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என கூறினார்.தமிழ்நாட்டில் 36 அரசு கல்லூரி மருத்துவமனைகளில் பிரத்யேக மறுவாழ்வு சிகிச்சை மையங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அண்டை மாநிலங்களிலிருந்து தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா போன்ற பொருட்கள் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் மாநில எல்லைகளிலும் சோதனை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.