அஜித்-விஜய் திரைப்படங்கள் வெளியாகும் போது பால் பாக்கெட்டுகளை திருடினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் எச்சரிக்கை

 
Nasar

நடிகர் அஜித்-விஜய் திரைப்படங்கள் வெளியாகும் போது ஆவின் பால் திருடப்பட்டால் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என அமைச்சர் நாசர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அலுவலக வளாகத்தில் ஆவின் பாலகத்தை தமிழக பால்வளதுறை அமைச்சர் சா.மு நாசர் திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர் பேசியதாவது: 
ஆவின் பாலகங்கள் வியாபார நோக்கோடு இல்லாமல் மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் செயல்பட்டு வருகிறது. 10000  ஆவின் பாலகங்கள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டுள்ளது. 50 ஹைடெக் ஆவின் பாலகங்கள் தமிழகம் முழுவதும் உள்ளது. நெய், வெண்ணெய், சாக்லேட் பால்பவுடர் , பாயசம் நூடில்ஸ் உள்ளிட்ட பொருட்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளோம். விரைவில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும்.

Nasar

நடிகர் அஜித்,விஜய் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியிடும்போது பால் அபிஷேகத்திற்காக ரசிகர்கள் ஆவின் பால் பாக்கெட் திருடினால் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும், ஏற்கனவே இது போல புகார் வந்த நிலையில் மூன்று அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்து உள்ளோம். கோடைகாலம் என்பதால் ஆவின் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. ஆவினில் பணிநியமன முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிறப்படும் எனவும் தெரிவித்தார். கடந்த மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட 16-அறிவிப்புகளில் 14-அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 2-அறிவிப்புகள் நீண்டகால இலக்கு என்கிற அடிப்படையில் செயல்வடிவம் பெற உள்ளதாகவும் தெரிவித்தார். இதேபோல அண்ணா சாலையில் ஸ்பென்சர் எதிரே புதிதாக துவக்கப்பட்ட ஆவின் பாலகத்தையும் அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்.