செருப்பு பத்திரமாக உள்ளது... தேவைப்பட்டால் அணுகவும் - அமைச்சர் டுவீட்

 
PTR issue

தனது காரின் மீது வீசப்பட்ட செருப்பு பத்திரமாக உள்ளதாகவும் தேவப்பட்டால் உரியவர்கள் தனது ஊழியர்களிடம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மதுரை மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உயிரிழந்தார். நேற்று அவரது உடல் தனி விமான மூலம் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து அவரது உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் மீது மதுரை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஆகஸ்ட் 26-ந்தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இந்த நிலையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த சம்பவம் தொடர்பாக தனது டுவிட்ட பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில்,  'நேற்றைய நிகழ்வுகளைப் பற்றி நான் பின்னர் கூறுகிறேன். பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் கட்சி நிர்வாகிகளுடன் அந்த பெண் எப்படி உள்ளே அனுமதிக்கப்பட்டார் ? .காலணியை திரும்பப் பெற விரும்பினால், எனது ஊழியர்கள் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள் உரியவர்கள் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.