ரேசன் கடைகளில் கைரேகை பதிவுக்கு பதில் கண் கருவிழி பதிவை அமல்படுத்த நடவடிக்கை - அமைச்சர் சக்கரபாணி

 
Minister sakkarabani

ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க கைரேகை பதிவுக்கு பதில் கண் கருவிழி பதிவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 
 
சென்னையிலிருந்து ஒட்டன்சத்திரம் செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்தார்., அப்போது பேசிய அவர்,  தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி கடத்தல் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளிடம் அரிசி கடத்தல் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஆலோசனை செய்யப்பட்டு., ரேஷன் அரிசி கடத்தலில் யார் ஈடுபட்டாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக கூடுதலாக திருச்சி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு இரண்டு SP-பிக்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும்,  புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.  ரேஷன் கடைகளில் அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள 286 குடவுன்களிலிருந்து கொண்டு செல்லப்படும் அரிசி மூடைகளுக்கு குறியீடு எண் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

ration shop

இதேபோல் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க கைரேகை பதிவுக்கு பதில் கண் கருவிழி பதிவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்., மாற்றுத் திறனாளிகள் வயது முதிர்ந்தவர்களுக்கு பதிலாக சம்பந்தப்பட்ட நபர் யாரை தெரிவிக்கிறாரோ! அந்த நபரின் பெயரை ரேஷன் கடையில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் மாற்று நபர்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.