அருகதை இல்லாததால் தான் அண்ணாமலையை மக்கள் புறக்கணித்துள்ளனர் - அமைச்சர் சேகர்பாபு

 
sekar babu

உதயநிதி ஸ்டாலினுக்கு அனைத்து அருகதையும் இருப்பதால் தான் அவரை மக்கள் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அருகதை இல்லாததால் தான் அவரை மக்கள் புறக்கணித்துள்ளனர் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். 

சென்னை பிராட்வே இப்ராகிம் சாலையில் உள்ள மாடித்தோட்டம் பூங்காவை புனரமைக்கும் திட்டத்தை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் துவங்கி வைத்தனர்.  அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்,மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பிராட்வே இப்ராஹிம் சாலையில் உள்ள இந்த மாடி பூங்கா தோட்டம் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

annamalai

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திசை திருப்பும் வகையில் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது என்று கூறிய அவர் மேலும் மத்திய அரசு மாநில அரசுகளை புண்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். பாஜக தலைவர் அண்ணாமலை உதயநிதி ஸ்டாலின் கார் கமலாலயம் வருவதற்கு ஒரு அருகதை இருக்க வேண்டும் என்று பேசியிருப்பது குறித்த கேள்விக்கு, அண்ணாமலை பேசுவதற்கு எல்லாம் பதில் கூற இயலாது என்று கூறினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலினுக்கு அனைத்து அருகதையும் இருப்பதால் தான் அவரை மக்கள் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அருகதை  இல்லாததால் தான் அவரை மக்கள் புறக்கணித்துள்ளனர் என்றும் கூறினார்.