அனைத்து கோவில்களிலும் அன்னை தமிழில் அர்ச்சனை செய்வது கடினம் - அமைச்சர் சேகர் பாபு

 
sekar babu

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் அன்னை தமிழில் அர்ச்சனை செய்வது என்பது கடினம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
 

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து வெயிலில் நின்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு குளிரூட்டும் வகையில் அமைக்கப்பட்ட மூடுபனி அமைப்பிலான நீர் தெளிப்பான்களை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது: கோவிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை செய்யும் விதத்தில் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மனசாட்சி உள்ளவர்கள் மாற்று கருத்தை பதிவிட முடியாத வகையில் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சட்டமன்ற அறிவிப்பு இல்லாமல் 30 க்கும் மேற்பட்ட திட்டங்களை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி உள்ளது. கோடை காலம் என்பதால் சாமி தரிசனம் செய்ய வெயிலில் வரிசையில் நிற்கும் பயணிகளுக்கு குளிர்ச்சி ஊட்டும் வகையில் கபாலீஸ்வரர் கோவிலில் மூடுபனி அமைப்பிலான நீர் தெளிப்பான்கள் அமைக்கபட்டுள்ளது.

sekarbabu

இது விரிவுபடுத்தப்பட்டு விரைவில் தமிழ்நாடு முழுவதும் அதிக பக்தர்கள் கூட்டம் வரும் கோவில்களில் அமைக்கப்படும்.பக்தர்கள் நடந்து செல்லும் பாதைகளில் தென்னை நார்கள் அமைப்பது எலுமிச்சை ரசம் மோர் உள்ளிட்டவற்றை பக்தர்களுக்கு வழங்குவது போன்றவற்றை தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை அனைத்து கோவில்களிலும் செயல்படுத்துகிறது.முடிந்தவரை அனைத்து கோவில்களிலும் அன்னை தமிழில் அர்ச்சனை என்ற திட்டத்தை தொடங்க உள்ளோம். இது கட்டாயமானது இல்லை. தற்போது வரை 48 கோவில்களில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது.  அன்னை தமிழில் அனைத்து கோவில்களிலும் அர்ச்சனை செய்வது கடினம். எந்தெந்த கோவில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்ய வாய்ப்புள்ளதால் அந்த கோவில்களில் எல்லாம் தமிழில் அர்ச்சனை செய்ய விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.