திருமழிசை புதிய பேருந்து நிலையம் வருகிற ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வரும் - அமைச்சர் தகவல்

 
sekar babu

சென்னை அருகே திருமழிசையில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் வருகிற ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

சென்னை பூந்தமல்லி அருகே திருமழிசையில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணியை அமைச்சர்கள் சேகர்பாபு, சா.மு.நாசர் ஆகியோர்  ஆய்வு செய்தனர். பின்னர் அங்கு நடைபெற்று வரும் பணிகள், சிறப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். இந்த ஆய்வின் போது பூந்தமல்லி எம்.எல்.ஏ.கிருஷ்ணசாமி, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளரச்சித்துறை முதன்மை செயலர்அபூர்வா, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல்மிஸ்ரா, பூந்தமல்லி எம்.எல்.ஏ.கிருஷ்ணசாமி மற்றும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் உடன் இருந்தனர்.

sekar babu

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: திருமழிசை பேருந்து நிலையம் 70 அரசு பேருந்துகள் மற்றும் 30 தனியார் பேருந்துகளை ஒரே நேரத்தில் நிறுத்துவதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த 2 பஸ்களின் நடைமேடைகளும் சுவர் மூலமாக பிரிக்கப்படும். 37 புறநகர் பேருந்துகள் மற்றும் 27 ஆம்னி பேருந்துகள் நிறுத்த பார்க்கிங் வசதி மற்றும் பராமரிக்க பணிமனை வசதி அமைக்கப்படுகிறது. மாநகர பேருந்துகளை இயக்க தனியாக 36 பேருந்து நிறுத்தும் இடம் அமைக்கப்படுகிறது. 14 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மழைநீர் சேமிப்பு தொட்டி, மழைநீர் வடிகால்வாய், உயர் அழுத்த மின்சார வசதி, மின்தடையின்போது ஜெனரேட்டர் வசதி செய்யப்படுகிறது. மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் இடம், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வழித்தடம், பாலூட்டும் அறைகள் உள்ளிட்டவையும் அமையவுள்ளது. பணிகள் முடிவடைந்து இந்த புதிய பேருந்து நிலையம் வருகிற ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.