பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை சார்பில் குழு அமைப்பு.. - அமைச்சர் செந்தில் பாலாஜி..

 
senthil balaji


வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரத்துறை சார்பில் சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருக்கிறார்.  

வடகிழக்கு பருவமழைக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை, அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில்  அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.    இயக்குனர்கள், தலைமை பொறியாளர்கள் மற்றும் அனைத்து மேற்பார்வை பொறியாளர்களுடனான இந்த ஆய்வுக் கூட்டத்தில்,  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர் சிவலிங்கராஜன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? சென்னை வானிலை மையம் அறிவிப்பு

இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் செந்தில் பாலாஜி , இந்தாண்டு வடகிழக்கு பருவமழை அதிகமாக இருந்தாலும் எவ்வித பாதிப்புகளும் இல்லாத அளவிற்கு சீரான மின்விநியோகம் செய்வதற்காக நடைபெற்ற பணிகள், நடைபெறும் பணிகள், இன்னும் முடியாமல் உள்ள பணிகளை விரைந்து முடிக்க ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.  வடகிழக்கு பருவமழையை சமாளிக்க மின்மாற்றிகள் 14,442, மின்கம்பங்கள் 1,50,932 தயார் நிலையில்  இருப்பதாகவும் கூறினார்.  

மேலும்,   12,780 கி.மீ அளவிற்கு மின் கம்பிகள் தயார் நிலையில் இருப்பதாகவும்,  தமிழகம் முழுவதும் சேதமடைந்த 39,616 மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும்  கூறினார்.   இடையிலே 25,080 புதிதாக மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளது எனவும், 1,759 கி.மீட்டருக்கு புதிதாக மின்கம்பிகள் புதிதாக போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  சென்னையில் 5 கோட்டங்களில் புதைவட கம்பிகள் பதிக்கும் பணிகள் 2 மாதத்தில் முடிவடையும் என்றும்,  அடுத்த 2 மாதங்களில் சென்னையில் உள்ள 7 கோட்டங்களில் பணிகள் நடைபெறவுள்ளது என்றார்.  

  மின்சார வாரிய ஊழியர்கள்

மின்னகத்தில் மழை காலங்களில் அதிக அழைப்புகள் வரும் என்பதால் கூடுதலாக ஒரே நேரத்தில் 60லிருந்து 75ஆக தொலைப்பேசி இணைப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும்,  அடுத்த 5  ஆண்டுகளில் தமிழ்நாடு மின்வாரியத்தில் சொந்த நிறுவுதலில் 50 விழுக்காடு மின் உற்பத்தி அதிகரிக்கப்படும் என்றும்  கூறினார்.  கடந்த ஆண்டு 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்ட போல்,  இந்தாண்டும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைக்க இருப்பதாக தெரிவித்தார்.