கார்த்திகை தீப திருவிழா - ரூ.2.29 கோடி உண்டியல் காணிக்கை வசூல்

 
Hundi

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ரூ.2.29 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆகியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் புகழ்பெற்ற  அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு கார்த்திகை மாத மகா தீப திருவிழா கடந்த 27 ஆம் தேதி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றுதல் டிசம்பர் 6ஆம் தேதி நிகழ்ந்தது. அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில் மாலை 6 மணிக்கு 2668 அடி உயரமலையின் மீது  மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம் தொடர்ந்து 11 நாட்களுக்கு அணியாமல் ஏரிவது வழக்கம்.  இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் முக்கிய நிகழ்வான கார்த்திகை மகா தீபம் இன்று இரவுடன் நிறைவடைகிறது.  11 நாட்கள் மலை உச்சியில் மகாதீபம் எரிந்து வந்த நிலையில் நாளை காலை தீபக் கொப்பரையை மலையிலிருந்து கோயிலுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 

கார்த்திகை தீபத்திருவிழா நிறைவுக்கு பிறகு, நேற்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ.2.29 கோடி வசூலாகியுள்ளது. அருணாசலேஸ்வரர் கோவில் ஆதி அண்ணாமலையார், திருநேர் அண்ணாமலையார் கோவில், துர்க்கை அம்மன் கோவில், அஷ்ட லிங்க கோவில்களில் நிரந்தம் மற்றும் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த 86 உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் உட்பட 450 பேர் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். முதல் நாளான நேற்று 26 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ.2,29,20,669 ரொக்கம், 228 கிராம் தங்கம், 1,478 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக வசூலாகியுள்ளது. மீதமுள்ள 60 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி இன்று தொடர்ந்து நடந்து வருகிறது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.