கட்டட விதிகளை மீறினால் கிரிமினல் வழக்கு - நகராட்சி நிர்வாக துறை எச்சரிக்கை

 
Tamilnadu arasu

தமிழகத்தில் கட்டட விதிகளை மீறி கட்டிடம் கட்டினால் மாநகராட்சி, நகராட்சி விதிகளின் படி கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என நகராட்சி நிர்வாக துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தமிழகாத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பல பகுதிகளில், விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்படுவதாக, நகராட்சி நிர்வாகத் துறைக்கும், முதல்வரின் தனி பிரிவுக்கும் புகார்கள் வந்துள்ளன. இதனையடுத்து நகராட்சி நிர்வாகத் துறை இயக்குனர் பொன்னையா இது தொடர்பான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பொது கட்டட விதிகளை முறையாக கடைப்பிடித்து, புதிய கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். புதிய கட்டுமான திட்டங்களை செயல்படுத்தும் போது, அதற்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதை, உள்ளாட்சிகளின் நகரமைப்பு அலுவலர்கள், ஆய்வாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

கட்டட அனுமதி வழங்கிய பின், உரிய கால இடைவெளியில் கள ஆய்வு செய்து, விதிமீறல் நடக்கிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். அனுமதிக்கு மாறாக கட்டடம் கட்டுவது தெரிய வந்தால்; தவறான ஆவணங்கள் கொடுத்து அனுமதி வாங்கி இருந்தால், அதை ரத்து செய்ய வேண்டும். அனுமதி இன்றி கட்டப்படும் கட்டடங்கள் மீது, உரிய அமலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி, மாநகராட்சி சட்ட விதிகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில், நகராட்சி, மாநகராட்சிகளில் நகரமைப்பு அலுவலர்கள், ஆய்வாளர்கள், பொறியாளர்கள் சரியாக செயல்படுகின்றனரா என்பதை ஆணையர்கள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.