ஈஷா யோகா மையத்தில் தொடரும் மர்மசாவுகள் - நீதி விசாரணை நடத்த வேண்டும்!!

 
mutharasan

சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்  என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். 

இதுக்குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்  வெளியிட்டுள்ள அறிக்கையில், " கோவை மாவட்டத்தில் நவீன சாமியார் ஜக்கி வாசுதேவ் நிர்வாகத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மர்ம சாவுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. தற்போது அவிநாசி பகுதியைச் சேர்ந்த பழனிக்குமார் மனைவி சுபஸ்ரீ  மரணச்செய்தி வெளியாகியுள்ளது.ஈஷா யோகா மையம் உச்சமட்ட அதிகார மையத்தின்   செல்வாக்கு எல்லைக்குள் அழுத்தம் கொடுக்கும் பெரும் “சக்தி”  பெற்றிருப்பதால் அத்துமீறல்களும், மர்மச் சாவுகளும் தொடர்வதாக ஆழ்ந்த சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது. இது போன்ற சம்பவங்களுக்கு தமிழ்நாடு அரசின் காவல்துறை மௌன சாட்சியாக இருந்து கடந்து போகக் கூடாது.

mutharasan

ஈஷா யோக மையத்தில்  பயிற்சிக்காக  கடந்த 11.12.2022 ஆம் தேதி உள்ளே சென்ற சுபஸ்ரீ 18.12.2022 ஆம் தேதி வீடு திரும்ப வேண்டும். அன்று காலை 7 மணிக்கு மனைவியை அழைத்து வரச் சென்ற அவரது கணவர் பழனிகுமார்  11 மணி வரை காத்திருந்த பின்னர், அவர் காலையிலேயே சென்று விட்டதாக மையத்தினர் சொன்னது ஏன்? மனைவி காணவில்லை என ஆலாந்துறை காவல் நிலையத்தில் பழனிக்குமார் கொடுத்த புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அதில் கிடைத்த விபரங்கள் என்ன?  ஈஷா யோக மையத்தின் வாகனம் மூலம் சுபஸ்ரீ இருட்டுப்பள்ளம் பகுதிக்கு கடத்தப்பட்டது ஏன்?, சுபஸ்ரீ, வாடகை வாகனத்தில் இருந்து பதற்றத்துடன் பதறியடித்து தப்பி ஓடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இது எப்போது, ஏன் நிகழ்ந்தது? நேற்று 01.01.2023 சுபஸ்ரீ கிணற்றில் பிணமாக மிதந்த அதிர்ச்சி செய்தியை தொடர்ந்து எடுத்த நடவடிக்கைகள் என்ன?அரசு மருத்துவமனையில் இரவோடு, இரவாக உடற்கூறாய்வு முடித்து, மின் மயானத்தில் தகனம் செய்தது ஏன்? மனைவி காணமல் போனது குறித்து புகார் கொடுத்துள்ள சுபஸ்ரீயின்  குடும்பத்தினர், அவரது இறுதி காரியங்களை விருப்பபூர்வமக செய்தார்களா? என்பது போன்ற ஏராளமான கேள்விகள் எழுகின்றன.

jaggi vasudev

ஈஷா யோகா மையத்தில் தொடரும் மர்மச்சாவுகள், காணமல் போவோர் குறித்த புகார்கள், நில ஆக்கிரமிப்பு குறித்த முறையீடுகள் என எல்லாக் கோணங்களையும் விரிவாக விசாரித்து, குற்றச் செயல்கள் தடுக்கப்பட வேண்டும். ஈஷா யோகா மையம் தொடர்பாக எழுந்துள்ள புகார்கள் மீது வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட  அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.  இதற்கான முறையில் நேர்மையும், சமூக அக்கறையும், நம்பகத்தன்மையும் கொண்ட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை நடத்தவும் சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு  தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.