காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் - கோவையில் என்.ஐ.ஏ. விசாரணை

 
NIA Covai

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

கடந்த 23 ஆம் தேதி அதிகாலை 4  மணியளவில், கோவை மாநகரம், உக்கடம், கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் அருகே, மாருதி காரில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கோவை மாநகரம் பி4 உக்கடம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23),  முகமது ரியாஸ் (27),  ஃபிரோஸ் இஸ்மாயில் (27),முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய  ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைதான 5 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் கைதான 5 பேரும், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

இந்த நிலையில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு என்.ஐ.ஏ. விசாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக தேசிய புலனாய்வு முகமையின் டிஐஜி மற்றும் கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினர் கோவை வந்துள்ளனர். இந்த சம்பவம் நடைபெற்ற இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். காரில் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள், ஜமேசா முபினின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து காவல்துறையினரிடம், என்ஐஏ அதிகாரிகள் கேட்டறிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.