ரூபாய் நோட்டில் காந்தி படம் இருப்பதே வருத்தம் தான் - சீமான் பேட்டி

 
seeman

ரூபாய் நோட்டுகளில் லட்சுமி தெய்வத்தின் படத்தை அச்சிட வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்த நிலையில், இந்த சிந்தனை பெரும் மடமை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அரவிந்த் கெஜ்ரிவால் ரூபாய் நோட்டுகளில் லட்சுமி தெய்வத்தின் படத்தை அச்சடிக்குமாறு கூறியது தொடர்பாக கேள்வி எடுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய சீமான் கூறியதாவது: முதலில் ரூபாய் நோட்டில் காந்தி படம் இருப்பதே வருத்தம்தான். காரணம், ஊழல், லஞ்சத்திற்கு எதிராக இருந்த காந்தியின் படம் போட்ட ரூபாய் நோட்டு தான் லஞ்சமாக கொடுக்கப்படுகிறது. மதுவிற்கு எதிராக இருந்த காந்தி சிரித்துக்கொண்டிருக்கும் படம் போட்ட நோட்டு தான் மது வாங்குவதற்கும் கொடுக்கப்படுகிறது. விபசார விடுதிகளில் அதே காந்தியின் படம் போட்ட ரூபாய் நோட்டு தான் கொடுக்கப்படுகிறது. கொலை செய்பவனுக்கும் காந்தி முகம் பதித்த ரூபாய் நோட்டு தான் கொடுக்கப்படுகிறது. அந்த ரூபாய் நோட்டில் நீங்கள் சாமியாக வணங்குகிற லட்சுமி படம் போட்டால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப்பாருங்கள். 

seeman

அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு அறிவார்ந்த தலைவர் என்று நினைத்தேன். ஆனால், ரூபாய் நோட்டில் காந்தி படத்திற்கு பதிலாக லட்சுமி படத்தைப் போட வேண்டும் என்று அவர் கூறிய கருத்தை நான் ஏற்கவில்லை. கொலை செய்பவனிடம், மது விற்பனையாளரிடம், ஊழல் செய்பவனிடமும், லஞ்சம் வாங்குபவனிடமும் லட்சுமி தெய்வம் துணை செல்ல விடுவதா? இந்த சிந்தனையே பெரும் மடமை. இவ்வாறு சீமான் கூறினார்.