பொது வாக்கெடுப்பு நடத்தி தனி தமிழ் ஈழம் கொண்டுவர வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

 
seeman seeman

பொதுவாக வாக்கெடுப்பு நடத்தி இலங்கையில் தனி தமிழ் ஈழம் கொண்டுவர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். 

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் எதிரில் உள்ள விஜயா சேஷாத்திரி மஹாலில் நடைபெற்ற மாவீரர் தின விழாவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு இலங்கையில் நடைபெற்ற போரில் பலியான பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகளின் படங்களுக்கு அஞ்சலி செலுத்தினார். 

இதன் பின்னர் விழாவில் அவர் பேசியதாவது:  ஈழ விடுதலைப் போரில் சுமார் 100 பேரில் 80 பேருக்கு காலும், கைகளும், கண்களும் இல்லை. அவர்கள் தம் பிள்ளைகள் தமிழ் ஈழுத்தை பார்க்க வேண்டும் என்று போராடி தன் உறுப்புகளை துறந்தார்கள். புறநானூற்று வீரத்தை நாம் படித்தோம். ஆனால் புறநானூற்று வீரத்தை படைத்தவர் பிரபாகரன். மாவீரர்கள் தினத்தை கடைபிடிக்க வேண்டியது நமது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். 2 மாவட்ட நிலமே உள்ள ஈழ விடுதலைப் போரில் 50 ஆயிரம் மாவீரர்கள், 2 லட்சம் பொதுமக்களும் தங்கள் உயிரை இழந்தார்கள். ஈழ வரலாறு அம்மக்களின் கண்ணீர், மாவீரர்கள் ரத்தத்தால் எழுதப்பட்டது. மாவீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வரலாறு உண்டு. அவற்றை நாம் நினைவில் போற்றுவோம்.   ஈரான், ஈராக் போர், சோமாலியா என உலகில் மக்கள் எங்கு காயப்பட்டாலும் தமிழ் இனம் அழும். இந்த பண்பாடு வேறு எங்கும் இல்லை . இலங்கையில் ஒன்று தமிழ் இனம், மற்றொன்று சிங்கள இனம். பொதுவாக வாக்கெடுப்பு நடத்தி தனித் தமிழ் ஈழம் கொண்டுவரவேண்டும். இவ்வாறு கூறினார்.