டிபிஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று பெயர் சூட்டல்

 
dpi

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள டிபிஐ வளாகத்திற்கு,  பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

திமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா இன்று திமுகவினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  தமிழகத்தின் முதிர்ந்த அரசியல்வாதியாக திகழ்ந்தவர் க. அன்பழகன். திமுக அரசின் அமைச்சரவையில் பல்வேறு  காலகட்டங்களில் நிதி, கல்வி, சுகாதார, சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த இவர் பேராசிரியர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி அன்பழகன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இதனிடையே  சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து தொடக்க கல்வி அலுவலகமும் அமைந்துள்ள டி.பி.ஐ. வளாகத்திற்கு  பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று பெயர் சூட்டப்படும் என்று சட்டசபையில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி டி.பி.ஐ. முகப்பில் அவரது பெயரில் நூற்றாண்டு வளைவு கட்டி முடிக்கப்பட்டது. அந்த வளைவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் திறந்து வைத்தார். மேலும் பள்ளி கல்வி வளாகத்துக்கு (டி.பி.ஐ.) பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று பெயர் சூட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.