ஒரு இடத்தில் கூட ஓபிஎஸ் படம் இல்லை! கட்சியில் இருந்து வெளியேற்றமா?

 
ooo

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்காக வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள்,கட் -அவுட்கள், ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களில் ஓபிஎஸ் படம் முழுவதுமாக தவிர்க்கப்பட்டிருக்கிறது.  ஓபிஎஸ்சை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி சொல்லி இருக்கும் நிலையில், ஓபிஎஸ் படம் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளதால் அவரை கட்சியில் ஓரங்கட்டுவதோடு மட்டுமல்லாமல் கட்சியை விட்டே வெளியேற்ற முடிவெடுத்திருக்கிறார் எடப்பாடி என்று தெரிகிறது.

opp

கடந்த மாதம் 23ம் தேதி அன்று நடந்த அதிமுக பொதுக்குழுவில்  அரங்கத்திலும் அரங்கத்திற்கு செல்லும் வழியெங்கும் ஓபிஎஸ் -இபிஎஸ் இருவருக்கும் சம அளவில் பேனர்கள், கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன.  போஸ்டர்களில் இருவரின் படங்களும் இடம் பெற்றிருந்தன.   ஆனால் இந்த முறை தலைமை பதவி அதிகார போட்டி உச்சத்தில் இருப்பதால்,  எடப்பாடிக்கு எதிரான எல்லா அஸ்திரங்களையும் ஓபிஎஸ் எடுத்து வருவதால்,  நாளை காலையில் வானகரம் ஸ்ரீவாரு திருமண மஹால் வளாகத்தில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்காக அமைக்கப்பட்டிருக்கும் பேனர்கள், கட் அவுட்கள், போஸ்டர்களில் ஓபிஎஸ் படம் தவிர்க்கப்பட்டுள்ளது.

kk

நாளை நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் ஆன பின்னர் ஓபிஎஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கே.பி.முனுசாமி அறிவித்திருக்கிறார்.   தேர்தல் ஆணையத்திற்கு எடப்பாடி எழுதி இருக்கும் 40 பக்க கடிதத்தில் ,  அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சி தொண்டர்களுக்கு ஏராளமான தொல்லைகளை கொடுத்து வந்தார்.  தன் பதவியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற சுயநலத்துடன் பொதுக்குழு உறுப்பினர்களை துன்புறுத்தினார்.  அவரது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் கட்சி விரோத செயல்களாகவே இருந்தன.   கட்சியின் விதிகளை மீறுவதற்கு அவருக்கு தார்மீக உரிமையும் கிடையாது . 

ee
 
முதலில் அவர் பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்தார். அது நடக்காமல் போனதால் போலீஸ் மூலம் பொதுக்குழுவுக்கு இடையூறு ஏற்படுத்தினார். அப்படியும் நடக்காமல் போனது.   உடனே  பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று  போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதினார்.  அதிலும் பலன் கிடைக்காமல் போனதால் தனது ஆதரவாளர்களை கட்சிக்கு எதிராக தூண்டி விட்டார் .  அவர்கள் மூலம் அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக செயல்பட வைத்தார் .

இவை எல்லாமே அதிமுகவின் கட்சி விதிகளுக்கு எதிரான நடவடிக்கை.   சட்டவிரோத நடவடிக்கை.   இதற்காக அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓபிஎஸ்ஐ தகுதி நீக்கம் செய்யலாம் என்று தெரிவித்திருக்கிறார். மேலும்,  திமுக தொடர்பாக இனி ஓபிஎஸ்சிடம் தேர்தல் ஆணையம் எந்த தகவல் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்.   அதிமுகவினர் மத்தியில் அவர் செல்வாக்கை இழந்துவிட்டார்.  அதனால் அவரின் சார்பாக யாரும் மனு கொடுத்தாலும் அதையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார்.

அதிமுகவுக்கு ஓபிஎஸ்க்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை என்றே சொல்கிறது எடப்பாடியின் அந்த 40 பக்க கடிதம்.  இதில், பொதுக்குழு கூட்டத்திலும் ஓபிஎஸ் படம் புறக்கணிக்கப்பட்டிருப்பதால்  நாளை நடைபெறும் பொதுக்குழுவில் ஓபிஎஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரை தகுதி நீக்கம் செய்து கட்சியை விட்டே வெளியேற்ற திட்டமிடப்பட்டிருக்கிறது என்றே தெரிகிறது.