திடீர் பரபரப்பு! ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை

 
op

சென்னை பசுமைவழி சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி மீண்டும் ஈரோடு  கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறது.  அக்கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.  அதிமுக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நிலையில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதேசமயம் அதிமுக ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என  இரு தரப்பாக பிரிந்து தேர்தலை சந்திக்க உள்ளது. மேலும் இத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல தேமுதிகவும் தனித்துப் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் பாமக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் இருந்து பின்வாங்கியுள்ளது. இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழுவை அமைத்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் இரட்டை இலை சின்னம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். 

இந்நிலையில், சென்னை பசுமைவழி சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் நகர்வு குறித்து விவாதிப்பதற்காக இந்த ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதேபோல் இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.