அக். 2ம் தேதி விசிக-வின் மனித சங்கிலி பேரணிக்கும் அனுமதி மறுப்பு..

 
 அக். 2ம் தேதி  விசிக-வின் மனித சங்கிலி பேரணிக்கும் அனுமதி மறுப்பு..


ஆர்எஸ்எஸ்  பேரணிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில்,  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில்   தமிழகம் தழுவிய சமூக ஒற்றுமை மனித சங்கிலி, பேரணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழ்நாட்டில் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தது.  இதற்கு அனுமதி கோரி  அந்தந்த மாவட்ட  காவல் கண்காணிப்பாளரிடம்  ஆர்.எஸ்.எஸ் விண்ணப்பித்திருந்தது.  அத்துடன் இந்த ஊர்வலத்துக்கு  நிபந்தனையுடன்  அனுமதி வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றமும் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.  இந்த நிலையில், சட்டம்- ஒழுங்கு பிரச்சனை காரணமாக ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தர இயலாது என தமிழ்நாடு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.  இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்,  வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள்,  மாநிலத்தில் மத உணர்வுகளை தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருவதால் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்திருக்கிறது.  

 அக். 2ம் தேதி  விசிக-வின் மனித சங்கிலி பேரணிக்கும் அனுமதி மறுப்பு..

இதேபோல், ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு  எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், சமூக நல்லினக்கத்தை பேணும் வகையிலும்,  தமிழகம் முழுவதும் அக்.2-ஆம் தேதி  விடுதலை சிறுத்தைகள் கட்சி மனித சங்கிலி பேரணி நடத்தப்படும் என அறிவித்திருந்தது. இதற்கு நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி, காங்கிரஸ், மதிமுக, திராவிடர் கழகம் ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. இந்நிலையில்,  ஆர்எஸ்எஸ் ஊர்வலம் மட்டுமில்லாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழகம் தழுவிய சமூக ஒற்றுமை மனித சங்கிலி, பேரணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  அதுமட்டுமில்லாமல், அக்.2-ஆம் தேதி பேரணி, பொதுக்கூட்டம், போராட்டம் உள்ளிட்டவை நடத்த எந்த அமைப்புகளுக்கும் அனுமதி இல்லை என தமிழக காவல்துறை திட்டவட்டமாக தகவல் கூறியுள்ளது.