மார்ச் 3, 4ம் தேதிகளில் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா..

 
மார்ச் 3, 4ம் தேதிகளில் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா..

மார்ச் 3, 4  தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெறும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.  

ராமேஸ்வரத்திலிருந்து 12 க.மைல் தொலைவிலும்,  இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது தான் கச்சத்தீவு.  பாக்ஜலசந்தி கடற்பரப்பில் அமைந்துள்ள இந்த கச்சத்தீவுக்கு,  ராமேசுவரத்திலிருந்து சுமார் 2.5 மணி நேரத்தில் சென்று விடலாம்.  அதேபோல்  இலங்கையின் நெடுந்தீவு மற்றும் தலைமன்னாரில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரத்தில் கச்சத்தீவை அடையலாம். இந்தக் கச்சத்தீவில் 1913ம் ஆண்டு புனித அந்தோணியார் தேவாலயம் நிறுவப்பட்டது.  இயற்கைச் சீற்றம், புயல் போன்ற பேராபத்து காலங்களில் காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் புனித அந்தோணியாருக்கு வழிபாடு நடத்திய பின்னரே கடலுக்குள் செல்வது வழக்கம்.

கச்சத்தீவு தேவாலயம்

ஆனால்,  ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை, 1974ஆம் ஆண்டு ஜூலை 8ம் தேதி இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி மற்றும் இலங்கை பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்காவுக்கு எழுதிக் கொடுத்துவிட்டார்.  இந்த கச்சத்தீவு ஒப்பந்தப்படி அங்குள்ள புனித அந்தோணியார் தேவாலயத் திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்க  உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி  ஆண்டுதோறும் கச்சத்தீவு திருவிழாவில் இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வர்கள். கொரோனா காலங்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.  

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயம்
இந்த நிலையில் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா குறித்த முதற்கட்ட ஆலோசனை கூட்டம் இலங்கை , யாழ்ப்பாணம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதில்  இலங்கை சுகாதாரத்துறையினர், கடற்படை அதிகாரிகள், யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆட்சியர், மற்றும் இந்தியாவிற்கான இலங்கை தூதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இதில்  கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா  மார்ச் மாதம் 3 மற்றும் 4ம் தேதிகளில் கொண்டாடப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.  
இந்த ஆண்டிற்கான கச்சத்தீவு திருவிழாவிற்கு தமிழகத்திலிருந்து 5 ஆயிரம் பக்தர்களும்,  இலங்கையிலிருந்து  10 ஆயிரம் பக்தர்களும் இந்த திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதுகுறித்து  அதிகாரபூர்வமாக அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த திருவிழாவிற்கான முழு ஏற்பாடுகளை நெடுந்தீவு நிர்வாகம் மற்றும் இலங்கை கடற்படை சார்பில் செய்யபட உள்ளது.