டிச.7ம் தேதி தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..

 
மழை

டிசம்பர் 7ஆம் தேதி தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

 இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  தென்கிழக்கு வாங்கக்கடல் மற்றும் அதனை ஓட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது  அடுத்த 48   மணி நேரத்தில் மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்றும்,   தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுவடையும் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  டிசம்பர் 8ம் தேதியை ஒட்டி மேற்கு -  வட மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் , புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் அருகே நிலவும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மழை

 இதனால் டிசம்பர் 7ஆம் தேதி  வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் அடுத்து வரக்கூடிய 5 நாட்களுக்கு  லேசானது முதல் மிதமான அளவில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும்,  வரும் 5 மற்றும் 7ம் தேதிகளில் தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்  அறிவித்துள்ளது. இந்நிலையில்,  நாளை அந்தமான் கடல் பகுதிகளுக்கும்,   5ஆம் தேதி மற்றும் 6ஆம் தேதிகளில் தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதிகளுக்கும்,  6ஆம் தேதி முதல்  தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதிகளுக்கும்  மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.